×

மாவட்டத்தில் 10ம் தேதி முதல் 4.53 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு

*டோக்கன் விநியோகத்தை கலெக்டர் ஆய்வு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 10ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் விநியோகம் பணியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.தைப்பொங்கலை கொண்டாட ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ₹1000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த பரிசு தொகுப்பு நாமக்கல் மாவட்டத்தில், ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா ரேஷன் கார்டுதாரர்கள் தவிர்த்து, 4.53 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று துவங்கியது.

ரேஷன் கடை ஊழியர்கள், பொதுமக்களிடம் வீடு, வீடாகச் சென்று டோக்கனை வழங்கினர். டோக்கன் வழங்கும் பணி நாளை (9ம் தேதி) வரை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை, அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடை விற்பனை முனைய இயந்திரத்தில், பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும். பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்ட விவரம், ரேஷன் கார்டுதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் ஒருவர் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாகவோ, இதர நபர் வாயிலாகவோ பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட மாட்டாது. தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில், ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புகார்கள் இருந்தால், பொதுமக்கள் தொலைபேசி மூலம் புகார் அளிக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட கட்டுப்பாட்டு அறை-04286-281116, நாமக்கல்-9445000233, ராசிபுரம்-9445000234, சேந்தமங்கலம்-9445796437, மோகனூர்-9499937026, கொல்லிமலை-9445796436, திருச்செங்கோடு-9445000235, பரமத்திவேலூர்-9445000236, குமாரபாளையம்-9445796438 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் டோக்கன் விநியோகம் செய்யும் பணியை, கலெக்டர் உமா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதனிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்பட உள்ள இலவச வேட்டி, சேலைகள், மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே வேட்டாம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகளை கலெக்டர் உமா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அருளரசு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post மாவட்டத்தில் 10ம் தேதி முதல் 4.53 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு appeared first on Dinakaran.

Tags : Pongal ,Namakkal ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டத்தில்...